articles

img

இசையும் அன்பும் இயற்கையோடு…

அந்த காட்டில் இயற்கை ஓர் இசைக் கச்சேரியையே நடத்திக் கொண்டிருக்கிறது … அதோ ! புல்லாங்குழலின் மென்மையான இசை நெஞ்சை வருடுகின்றதா ? அது வேறொன்றுமில்லை . அசைந்தாடும் மூங்கிலை வண்டுகள் துளைத்துவிட்டன .அந்தத் துளையில் காற்று புகுந்து வெளியேறுகிற ஓசையே இசையாகிறது . அதோ ! தேர்ந்த கலைஞர்கள் ஏராளமான மத்தளங்களை கேட்பவர் தாளமிட வாசிக்கின்றனர். அதுவா ? வேறொன்றுமில்லை . அருவி மேலிருந்து கீழே ஒசை நயத்தோடும் தாள லயத்தோடும் கொட்டும் இன்னொலிதான் அது. இதோ !யானைத் தும்பிக்கை போல் வளைந்த - நாதஸ்வர வகை சார்ந்த இசைக்கருவி பெருவங்கியத்தின் உரத்த அழுத்தமான இசை காற்றில் மிதந்து வருகிறதே ! அதுவா ? வேறொன்றுமில்லை ,கலைமான்கள் கூட்டமாக குரல் எழுப்புகிறது ; தாள லயத்தோடு அக்குரல் இசையாய்  மிதந்து வருகிறது. இதயத்தை வருடும் யாழின் இசை காதில் தேனாய்ப் பாய்கிறது . அதுவும் வேறொன்றுமில்லை .பூக்களைச் சுற்றி ரீங்காரமிடுகிறது வண்டுகள் .அந்த ரீங்காரமே யாழின் இசையென நெஞ்சை குளிர்விக்கிறது. இந்த அற்புதமான இசைக் கச்சேரியில் மந்திக்கூட்டம் மயங்கி நிற்கிறது . அடர்ந்த மூங்கில் தோப்பருகே மயிலொன்று தோகை விரித்து ஆடுகிறது .இசை கேட்டு விறலியர் நாட்டியப் பெண்கள் நடனமாடுவதுபோல் இருக்கிறது. இவ்வளவு அற்புதமாக எழில் கொஞ்சும் சேர நாட்டில் . தன் அகன்ற மார்பில் மாலை சூடிய சேரமன்னர் ,தன் கூர்மையான அம்பை யானை மீது ஏவுகிறார் .அந்த யானை காயத்தோடு பிளிறிக்கொண்டே வனத்தில் செல்கிறது. அந்த யானையைப் பார்த்தீரா பார்த்தீரா எனக் கேட்டுக்கொண்டே மன்னர் வருகிறார் .தினைப் புனத்தில் வாயில் அருகிலும் நின்று கேட்டார் . “ஆம், எல்லோரிடமும்தான் கேட்டார் .ஆயின் அவரைப் பார்த்ததும் காதல் கொண்டு மயக்கத்தில் தோள் மெலிந்து நான் மட்டும் துவண்டு கிடப்பதேன்?” எனத் தோழியிடம் நாயகி கேட்டாளாம். இப்படி ஒரு அற்புத இயற்கை காதல் சித்திரத்தை அகநானூறில் வரைந்து காட்டி இருக்கிறார் கபிலர்.